அருட்பெருஞ் ஜோதி ! அருட்பெருஞ் ஜோதி!
தனிப்பெருங் கருணை! அருட்பெருஞ் ஜோதி!
தனிப்பெருங் கருணை! அருட்பெருஞ் ஜோதி!
அருட்பெருஞ் ஜோதிக் கடவுள் விளக்கமே இக்கொடியினால் நன்கு குறித்துக் காட்ட வேண்டி மூன்று பங்கு அளவு வெண்ணிறமும், ஒரு பங்கு அளவு மஞ்சள் நிறமும் அமைந்துள்ளதாம். அதாவது, ஒன்றான தனித் தலைமப் பெரும்பதி ஆகிய கடவுள் தனிப்பெருங் கருணை வடிவினராவார். அவர் தமே அருட்பெருஞ் ஜோதியராய், உலகும், உயிரும், உயிருள் விளங்கும் பரம்பொருளுமாய்த் திகழ்கின்றதைச் சுட்டவே அருட்பெருஞ் ஜோதியை மும்முறையும் தனிப்பெருங்கருணையை ஒரே தரமுமாய் ஓதி வைத்தார். மேலும், மனிதன் இந்த இறையொளி அனுபவத்தைக் கருணை நிரம்பிய உயிர் உணர்வில் இப்பொழுதுதான் பெறுகின்றான். இந்த உயிர் நிலையில் தான் அருட்பெருஞ் ஜோதி இறைவன் தனிப்பெருங் கருணையுடன் திகழ்கின்ற உண்ம அனுபவப்படுகின்றது. அத்தோடு இந்த உயிர் நிலைக்குள்ளீடான அகத்தே அருட்பெருஞ் ஜோதி, பூரணமாய் அருவமாய் இருப்பதாகவும், புற வெளி முழுதும் உருவமாய் நிறைந்திருப்பதாகவும் கண்டு கொள்ளப் படுகின்றதாம் இக்காரணத்தால் கடவுளின் நிறை உண்மையைக் குறிக்க வந்த மகா மந்திர வாசகமாக அருபெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி என்பதாக விரித்து விளக்கிக் காட்டப்பட்டதாம். மேற்குறித்த கடவுள் விளக்க மந்திர மொழியில் நடு நின்றிலங்கும் “அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” யில் ஆறும் ஏழுமாக பதின்மூன்று ஒலி அசைகள் (Syllables) விளங்குவது, திரயோதசம் என்னும் அருள் அனுபவ நிலையையுணர்த்துவதாம். இப்பதிமூன்றாம் அருளனுபவ நிலையின் உண்மை குறிக்கவே இதனை “பல்” என்ற சொல் வண்ணமாய்த் தமிழில் தந்துள்ளனர் “ல்” பதின்மூன்றாவது மெய் எழுத்து ப-நம் கடவுட் ஜோதி விளங்கும் ஆன்ம பீட நிலல வடிவாம். இந்தப் “பல்” நிலையே அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணைக் கடவுளனுபவத்தைக் குறிக்க வந்துள்ளது. அகண்டமான அருட்பெருஞ் ஜோதி நிலையில், ஒரு பக்குவ ஆன்ம அணுவில் அருட்பெருஞ் ஜோதிக் கடவுள் தனிப்பெருங் கருணையோடு எழுந்தருளி அன்பவம் வழங்குகின்றது. அடிமுடி அறியக் கூடாத ஒரு தொடர் சங்கிலியில் ஒரு வளையத்தை எடுத்து ஆய்வது போல் இருக்கின்றது இவ்விறை அனுபவ நிலை. இதற்கு முன் நிலையும் பின் நிலையும் அருட்பெருஞ் ஜோதி மாத்திரமாய் இருக்க நடுநிலைக்கண்ணே, தனிப்பெருங் கருணையோடு சேர்ந்த கடவுள் அருட்பெருஞ் ஜோதியாக அனுபவமுறுகின்றதாம். இதனை,
“ஆடும் கருணைத் திருநடத்தீர் ஆடும் இடம்தான் யாதென்றேன்
பாடும் திருவும் செளந்தரமும்பழமும் காட்டும் இடமென்றார்
நாடும் படிநன் கருளு மென்றேன் நங்காய் முன்பின் ஒன்றேயாய்
ஈடுந்திய பல்நடு வுளதால்என்றார் தோழி இவர்வாழி”
என்ற பாவிற் குறித்த வண்ணம், ‘பல்” நிலையில் அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணையாய் நின்றாடும் கடவுள் முன்னும் பின்னும் “அம்” பொன்னொளியாம் அருட்பெருஞ் ஜோதியைக் கோவிலாகக் கொண்டு விளங்குகின்றாராம். இதுவே (அம்+பல்+அம்) அம்பலம் என்று கொள்ளப்படுவது. அருள் அனுபவம் தரவந்த அம்பலத்தாடும் கடவுள் இன்று அழியா இன்ப வாழ்வையே வழங்குகின்றார் என்பது தெரிவித்து நிற்பது, இரண்டாம் அடிப்பொருளாம். அதாவது, திரு = பொன்; செளந்தரம் = அழகு = அம்; பழம் = பலம் (பொன்+அம்+பலம்) ஆம். பொன்னம்பலம் தான் நம், தூல, சூக்கும, காரண தேகத்தையே சுத்த பிரணவ, ஞான தேகமாக ஆக்கி அனுபவிக்கச் செய்வதாம். முன்பெல்லாம் இந்த பொன்னம்பலக் காட்சி, அயலிருந்து கண்டு களித்த மனிதனுக்கு நீடித்த வாழ்வோடு நிலைத்து விளங்கச் செய்யவில்லை. இப்பொழுது தான் சுத்த அருள் நிறைவால் மனிதனைத் தன் மயமாய் ஆனந்த நடனமே பேரின்ப வாழ்வு எனக் கொண்டு நிலவச் செய்து விடுகின்றார். இக்கடவுள் உண்மையை வெளிப்படுத்தத்தான் அன்று அருட்பெருஞ் ஜோதிக் கொடியை, சித்தி வளாகத் திருமாளிகை முன் உயர்த்திக் கட்டி, அக்கொடி விளக்கமும் லட்சியமும் குறித்து மகா உபதேச விரிவுரையும் வழங்கினார்.
(தொடரும்)